படப்பை அருகே தொடர் வழிப்பறி சம்பவத்தில் 5 பேர் கைது

படப்பை அருகே தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை அருகே தொடர் வழிப்பறி சம்பவத்தில் 5 பேர் கைது
Published on

வழிப்பறி திருடர்கள்

காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட படப்பையை அடுத்த செரப்பணஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர்கள் சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், இணை போலீஸ் கமிஷனர் மூர்த்தி, துணை போலீஸ் கமிஷனர் அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர்.

5 பேர் பிடிபட்டனர்

இந்நிலையில் படப்பை ஒரத்தூர் மேம்பாலம் அருகே 5 பேர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று 5 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

பிடிபட்ட 5 பேரையும் விசாரணை செய்ததில், அவர்கள் நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த வினோத் (வயது 22), சுரேஷ் (21), பார்த்திபன் (22), பிரேம்குமார் (19), குகன் (19) என்பதும், இவர்கள் 5 பேரும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

கால் முறிவு

இவர்கள் 5 பேரும், சரவணன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாகி இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து, 2 மோட்டார் சைக்கிள், 5 கத்திகள் உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் போலீசார் 5 பேரை மடக்கி பிடித்தபோது, தப்ப முயன்ற வினோத் என்பவர் வழுக்கி விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com