

சென்னை,
அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு போடப்பட வேண்டிய 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கொரோனா உள்பட பல்வேறு காரணங்களால் தாமதம் ஆனது.
இந்தநிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 4-வது கட்ட பேச்சு வார்த்தை நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.
பங்கேற்றவர்கள்
போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கே.கோபால், நிதித் துறை இணைச் செயலாளர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர் அ.அன்பு ஆபிரகாம் மற்றும் அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள், துணை குழு உறுப்பினர்கள், 66 பேரவை, தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின்னர், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பணி நியமன ஆணை
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி, 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
போக்குவரத்துக் கழகங்களில், பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பணி நியமன ஆணை வழங்கவில்லை என்ற கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முதற்கட்டமாக வரும் 14-5-2022 அன்று (நாளை) முதல்-அமைச்சரால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
சிறப்பு ஊதியம் ரூ.300
கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு ஒருமுறை சிறப்பு ஊதியமாக ரூ.300 வழங்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரூ.300 வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் இலவசமாக பயணம் செய்கின்ற சாதாரணக் கட்டண பஸ்களில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பேட்டா கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்.
15 படிகளில் உயர்வு
அதேபோல், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 15 வெவ்வேறு படிகளில் உயர்வு அளிக்க வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, 15 படிகளில் உயர்வு அளித்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள தொழில்நுட்பப் மேற்பார்வையாளர்கள், போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு ஒரு முறை மட்டும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணியாளர்களுக்கு எந்த விகிதத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கணக்கெடுக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 சதவீதம் சம்பளம் உயர்வு
ஊதிய நிர்ணயம் குறித்து கடந்த பேச்சுவார்த்தையில் ரூ.1,000 இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு இருந்தது. தற்பொழுது, தொழிற்சங்கங்கள் 8 சதவீத உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. அரசு சார்பில் முதற்கட்டமாக கடந்த 1-9-2019-ல் இருந்து 2 சதவீத உயர்வும், 1-1-2022-ல் இருந்து அடுத்தக்கட்டமாக 3 சதவீத உயர்வும் சேர்த்து மொத்தமாக 5 சதவீத உயர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் நடைபெற்ற குளறுபடியினை சரிசெய்திட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, இளநிலை, முதுநிலை என்ற பாகுபாடு இல்லாமல் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை சரி செய்திட, நிதித்துறையுடன் கலந்து ஆலோசித்து, தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஊதிய உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2 அல்லது 3 வாரங்களில் தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து இறுதி செய்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பதில்களும் வருமாறு:-
61 சதவீதமாக அதிகரிப்பு
கேள்வி:- பெண்களுக்கான இலவச பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது குறித்து..?
பதில்:- பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்ற சாதாரணக் கட்டண பஸ்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுதான் உண்மை. பஸ்களில் மகளிர் பயணம் செய்யும் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆங்காங்கே பெண்கள் பஸ்சுக்காக இருப்பதை பார்த்து, சாதாரணக் கட்டண பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தவறான புகார் எழுந்துள்ளது. கூடுதலாக தான் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கேள்வி:- ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 77 மாத நிலுவை அகவிலைப்படி வழங்க கோருவது தொடர்பாக..?
பதில்:- முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய பணியாளர்கள் நியமனம்
கேள்வி:- இம்மாதம் முதல் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்கள் நியமனம் செய்வது குறித்து..?
பதில்:- புதிய பணியாளர்கள் நியமனம் செய்வது குறித்து கோப்பு தயாரிக்கப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.