முகவரி கேட்பது போல் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

தங்கச்சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (வயது 70). இவர் தனது சொந்த கிராமத்திலேயே தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாப்பா மதியம் சுமார் 3 மணி அளவில் சீத்தப்பட்டி கிழக்கு பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு மைலம்பட்டி - பாளையம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள், பாப்பாவிடம் முகவரி கேட்பது போல் நின்று பேசி உள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த மர்மநபர் பாப்பா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை திடீரென்று பறித்து கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பா சிந்தாமணிபட்டி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கச்சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






