

குலசேகரன்பட்டினம்,
'கற்பகத்தரு' என்று அழைக்கப்படும் பனையில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் பலரும் பனைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு கருப்பட்டி தயாரித்து விற்கின்றனர்.
பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்துள்ளது. எனினும் அவற்றை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
ஆனால் பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பனை பொருட்களை சில்லறையில் விற்பனை செய்தால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் உடன்குடி பகுதியில் ஆய்வு செய்தனர்.
இதில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடிக்கு சீனி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ததும், பதநீரில் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் சீனி கலந்து தயாரித்த கருப்பட்டிகளை அசல் கருப் பட்டி என்று கூறி கடைகளில் விற்றதால் 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலும் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து விற்றுள்ளனர். இதன் மூலம் சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல், 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சிலர் பல்வேறு முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.