‘வாட்ஸ்-அப்’ மூலம் 50 அத்தியாவசிய சேவைகள்... ‘மெட்டா’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் - தமிழக அரசு முடிவு

இதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் திறனை மேம்படுத்துதலில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கும் வகையில் தமிழக அரசு, ‘வாட்ஸ்-அப்’ மூலம் அரசின் சேவைகளை செயல்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய வர்த்தக மெசஜ் பிரிவு இயக்குனர் ரவி கார்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ‘வாட்ஸ்-அப்’ ‘சாட்பாட்டினை’ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம். அதன் மூலம் ‘வாட்ஸ்-அப்’பில் புகார்கள் அளிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்றவற்றை எளிதாக செய்ய முடியும். இதனால், அரசு சேவைகள் மக்களின் கையடக்கத்தில் நேரடியாக கிடைக்கின்றன. சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல முறை செல்வதற்கான தேவையும் நீங்குகிறது.
முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பெறலாம்.
இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் அரசின் முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், தமிழ்நாடு மின் அளுமை முகமை முதன்மை செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ், இணை முதன்மை செயல் அலுவலர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இணை இயக்குனர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






