

சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கத்தில் 50 கிராம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி மாணவி மற்றும் பெண் மேக்கப் கலைஞர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இளம் பெண்களைப் போதைக்கு அடிமையாக்கி, அவர்களைக் கடத்தலுக்குப் பயன்படுத்திய அதிர்ச்சித் தகவலும் இந்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்று (செவ்வாய்க்கிழமை) சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் 2 இளம் பெண்களைப் பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிராம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாக போதைப்பொருள்களை சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, இளம் பெண்களை முதலில் போதைக்கு அடிமையாக்கி, பின்னர் அவர்களைப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் ஏஜெண்டுகளாக பயன்படுத்திய அதிர்ச்சி தரும் பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.