

சின்னசேலம்
மக்கள்தொடர்பு திட்ட முகாம்
சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட ஈரியூர் கிராமத்தில் வருவாய்த் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி 205 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 41 ஆயிரத்து 242 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அதன்படி 18 பேருக்கு மாற்றுத்திறனாளி, முதியோர், விதவை மற்றும் திருமண உதவித்தொகை, 35 பேருக்கு வீட்டுமனை, 81 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 38 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு, வேளாண்மைதுறை சார்பில் 6 பேருக்கு பேட்டரி மருந்து தெளிப்பான், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பேருக்கு சொட்டுநீர் பாசனம், மல்லிகை நிழல் கூடாரம் மற்றும் பனை செடி, சுகாதாரத்துறை சார்பில் 18 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மாற்றுத்திறனாளிகள்துறை சார்பில் 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், காதொலிக்கருவி ஆகியவை வழங்கப்பட்டது.
அதிகாரிகள் விளக்கம்
இதைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செல்வி, தலைமை ஆசிரியர் மணிவாசகம் மற்றும் சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தங்கள் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கமாக கூறினர்.
கண்காட்சி அரங்கு
முகாமையொட்டி தோட்டக்கலை, வேளாண்மை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் கவியரசு, மாவட்ட வளங்கள் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தனி தாசில்தார்கள் ரகோத்மன், கமலம், மண்டல துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.