

திருப்பரங்குன்றம்,
தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று அதிகாலை முதல் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தீபத்தூணில் இன்று மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர், சிஆர்பிஎப் ஐஜி, கோவில் பட்டர்கள் உள்பட 13 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழிகாட்டுதல் குழுவினர் இன்று மாலை 5 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்ற உள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வையொட்டி பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, பாதுகாப்பு பணியில் கூடுதலாக 400 சிஆர்பிஎப் வீரர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்தனர். பெங்களூருவில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கும் கூடுதல் படையினர் விரைந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை மற்றும் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் சிஆர்பிஎப் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தீபம் ஏற்றுவதற்கான தீபக்கொப்பரையை ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் மலைக்கு கொண்டு சென்றனர். கோவிலில் பூஜை செய்யப்பட்ட தீபக்கொப்பரைகளை நீதிபதிகள் மலைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்ல 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் நிர்வாக பொறுப்பாளர்களாக உள்ள நீதிபதிகள் அறிவித்துள்ளனர். பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் அனுமதி பெற்றவர்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர்த்து இதர நபர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட 50 நபர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் 3.00 மணிக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தீபத்தூணில் தீபக்கொப்பரை வைக்கப்பட்டுள்ளநிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.