பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு; அன்று பெரியார் முழங்கியது, இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒலிக்கிறது: கி.வீரமணி

தந்தை பெரியார், பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று முழங்கினார். அது இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மூலம் ஒலிக்கிறது என கி.வீரமணி கூறினார்.
பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு; அன்று பெரியார் முழங்கியது, இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒலிக்கிறது: கி.வீரமணி
Published on

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஆர்.வி.ரமணா பெண் நீதிபதிகளுக்கு தந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசும்போது, பெண்களுக்கு போதிய அளவில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதி நியமனங்களில் வாய்ப்புகள் இல்லை. தற்போது முறையே 11.5 சதவீதம், 9.8 சதவீதம் தான் பெண்கள் நீதிபதிகளாக நியமனம் பெற்று இயங்கி வருகிறார்கள். பெண்களுக்கு 50 சதவீதம் தரவேண்டியது அவசியம் என்று அழுத்தம் திருத்தமாக கூறியதோடு - உரக்க உரிமைக்குரல் எழுப்புங்கள் என்றும் உற்சாகப்படுத்தி உள்ளார். இது பாராட்டத்தக்கது.

இந்திய பார்கவுன்சிலில் நிர்வாக குழுவில் ஒரு பெண்கூட தேர்வு பெறாத வேதனையான சூழ்நிலையையும் நன்கு சுட்டிக்காட்டி உள்ளார். இதனை வரவேற்கிறோம். இது விரைந்து செயல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.80 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார், பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று முழங்கினார். அது இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மூலம் ஒலிக்கிறது.தமிழ்நாட்டில் தி.மு.க. அரசும், அதன் ஒப்பற்ற முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்ததை, 40 சதவீதமாக உயர்த்துவோம் என்று அறிவித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்கு உரியது.

சமூகநீதி, பாலியல் நீதி கொடிப் பறக்கத் தொடங்கிவிட்டது. பாலியல் நீதியில் ஒடுக்கப்பட்ட சமூக பெண்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை தருவது முக்கியம் - அவசரம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com