50 சதவீதம் வரிவிதிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி கடும் பாதிப்பு

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக கடல் உணவு ஏற்றுமதி கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
50 சதவீதம் வரிவிதிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி கடும் பாதிப்பு
Published on

தூத்துக்குடி,

வெளிநாடுகளுக்கு கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பதப்படுத்தப்பட்ட இறால், மீன், கணவாய், நண்டு உள்ளிட்டவை அடங்கும். 2023-24-ம் ஆண்டில் ரூ.60 ஆயிரத்து 523 கோடி மதிப்பிலான 17 லட்சத்து 81 ஆயிரத்து 602 டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.20 ஆயிரத்து 892 கோடி மதிப்பிலான 3 லட்சத்து 29 ஆயிரத்து 192 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக கடந்த 2023-24-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 214 கோடி மதிப்பிலான 73 ஆயிரத்து 822 டன் கடல் உணவு பொருட்கள், கண்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி குறைந்துவிட்டது.

அதனை ஈடுகட்டும் வகையில் அமெரிக்காவுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா திடீரென இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால் கடல் உணவு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் சுமார் 25 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 20 கண்டெய்னர்களில் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இதுகுறித்து டி.எஸ்.எப். கடல் உணவு ஏற்றுமதி நிறுவன இயக்குனர் கிப்ட்சன் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவு பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் 50 சதவீதம் வரி விதிப்பு கடல் உணவு ஏற்றுமதியை மிகவும் பாதித்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக அமெரிக்காவில் இந்திய கடல் உணவு பொருட்களை வாங்குவது குறைந்துள்ளது.

ஏற்றுமதி சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டது. மீன்களை வாங்கி இருப்பு வைப்பதும் குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஏற்றுமதி செய்யப்படும் உணவு பொருட்கள் தேங்கும் நிலை உருவாகிவிட்டது. கடல் உணவுகளை நீண்ட நாட்கள் இருப்பு வைக்க முடியாது. இதே நிலை நீடித்தால் கடல் உணவு நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும். இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com