50 சதவீத வரி விதிப்பு: கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பலர் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது.
50 சதவீத வரி விதிப்பு: கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
Published on

கோவை,

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. அமெரிக்காவிற்கு கோவையில் இருந்து அதிகளவில் தங்க நகைகள், என்ஜினீயரிங் பொருட்கள், ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய அளவில் திருப்பூர், கோவையில் இருந்துதான் அமெரிக்காவுக்கு அதிகமான ஏற்றுமதி நடக்கிறது. இதில் ஜவுளி ஏற்றுமதி மட்டும் ஒரு ஆண்டிற்கு 11 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 50 சதவீத வரிவிதிப்பால் இந்த பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூரில் பலர் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது.

கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்த தொழில் நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்கள் தற்போது குறைந்துள்ளன. இது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க ஜேம்ஸ் கூறியதாவது:-

தற்போதைய சூழலில் சங்கிலி தொடர் போல் ஒரு நிறுவனத்தை சார்ந்த மற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஏதாவது ஒரு நிறுவனம் பாதிக்கப்படும்போது அதன் தாக்கம் மற்ற நிறுவனங்களிலும் காணப்படுகிறது. இந்தியாவில் இருந்து அதிக அளவு அமெரிக்காவிற்கு உதிரி பாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராணுவ தளவாடங்கள் தொடர்பான உதிரி பாகங்களும் கோவையில் தயார் செய்யப்படுகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதை ஜாப் ஆர்டர்களாக எங்களுக்கு வழங்குகின்றன. வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதால் எங்களுக்கு வழங்கப்படும் ஜாப் ஆர்டர்களும் குறைந்துள்ளது. இதனால் கோவையில் உள்ள 35 ஆயிரம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே மத்திய அரசு அமெரிக்காவிடம் இதுகுறித்து உரிய பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com