

அருணாசல பிரதேசம், மேகாலயா, அசாம், திரிபுரா, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பிளஸ்-2 வரை படித்து முடித்த 50 மாணவர்கள் கல்லூரி மேல் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, சமூக சேவையாற்றும் நோக்கத்தில் இல்லறத்தை மறந்து புத்தமத கோட்பாடுகளை பின்பற்றும் வகையில் புத்த மதத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு புத்த மடத்தில் புத்தபிட்சுவுக்கான பயிற்சி பெறுகின்றனர்.
20 வயது முதல் 26 வயதுடைய இந்த மாணவர்கள் அனைவரும் புத்தமத கோட்பாடுகளை பின்பற்றும் வகையில் மொட்டை அடித்த நிலையில் புத்தமத பாரம்பரிய காவிசீருடை அணிந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.
இளம்புத்த துறவிகள் 50 பேரும் அங்குள்ள வெண்ணை உருண்டைக்கல் அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த புத்தபிட்சுகள் அவர்களுடன் வந்து இருந்தனர். அவர்கள் புத்தமத கோட்பாடுகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை சுட்டி காட்டி சில விளக்கங்கள் கூறி பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.