

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது புழல் ஏரி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு 2,738 மில்லியன் கன அடியாக இருந்தது. ஏரிக்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
எனவே ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
இந்த உபரிநீர் செங்குன்றம், சாமியார் மடம், வடகரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல் வழியாக எண்ணூர் கடலில் சென்று கலக்கிறது.
புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.