பயோ மைனிங் முறையில் 52.64 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல்

திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தினை மீட்டெடுக்க ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயோ மைனிங் முறையில் 52.64 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 52.64 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,300 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. 426 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் வசித்தும், வந்து சென்றும் வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகரினை சிங்காரச் சென்னையாக திகழச் செய்திடும் வகையில் சாலைகள், தெருக்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள், மயான பூமிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மண்டலம் 1 முதல் 8 வரையில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திலும், மண்டலம் 9 முதல் 15 வரை பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்திலும் திடக்கழிவுகள் பல்லாண்டு காலமாக கொட்டப்பட்டு வந்தன.

பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம், மக்கள்தொகை அதிகரிப்பு, வணிக செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய இரண்டு வளாகங்களிலும் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது.

இதனைத் தொடர்ந்து, பெருங்குடியிலும், கொடுங்கையூரிலும் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் 250 ஏக்கர் பரப்பளவு ஆகும். இதில் 225 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் உள்ள 27.50 லட்சம் டன் அளவிலான திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தினை மீட்டெடுக்க ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பயோமைனிங் முறையில் திடக்கழிவுகளை அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுநாள்வரை 26.14 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதர திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் வருகிற மார்ச் மாதத்திற்குள் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சிப்பம் 1 மற்றும் 2ல் இரண்டாம் கட்டமாக ரூ.53.60 கோடி மதிப்பீட்டில் சுமார் 5.50 லட்சம் டன் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றிட ஒப்பங்கள் கோரப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 333 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, ரூபாய் 641 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூரில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி 6 சிப்பங்களாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய 66.52 லட்சம் டன் திடக்கழிவுகளில் இதுவரை 26.50 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு, சுமார்‘ 6 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட இந்த நிலத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வாயிலாக ரூபாய் 57 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1,500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறாக பெருங்குடியில் 26.14 லட்சம் டன் திடக்கழிவுகள், கொடுங்கையூரில் 26.50 லட்சம் டன் திடக்கழிவுகள் என மொத்தம் 52.64 டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்கனவே ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் 1.07 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள 72 ஆயிரம் டன் திடக்கழிவுகளை ரூ.6.94 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்திட பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 6 மாதங்களில் முடிக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளின் காரணமாக இப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com