52-வது பிறந்த நாள்: தொகுதி மக்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் திட்டம்!

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, வியாசர்பாடி பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் தயாராகிவருகிறது.
vijay, விஜய்
Published on

சென்னை,

த.வெ.க. தலைவரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், வரும் 22-ந் தேதி தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நீண்ட பல காலமாக நடிகராக பிறந்த நாளை கொண்டாடிய அவர், முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது.

அதனால், இந்த முறை பிறந்த நாளை வித்தியாசமாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.எல்.ஏ. அலுவலகம் தயார்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

பெரம்பூர் தொகுதி

தற்போது, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, வியாசர்பாடி பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் தயாராகிவருகிறது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்தை, தனது பிறந்த நாளான வரும் 22-ந் தேதி திறக்க திட்டமிட்டுள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தொகுதி மக்களுடனேயே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடவும் முடிவு செய்துள்ளாராம்.

மாதத்தில் ஒருநாள் தொகுதி மக்களுடன்..

மேலும், மாதந்தோறும் குறிப்பிட்ட ஒரு நாளை, தொகுதி மக்களுக்காக செலவிடவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளாராம். அன்றைய தினம் தொகுதி மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அதன் மீது விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

தேவைப்பட்டால், பெரம்பூர் தொகுதி கட்சி அலுவலகத்திலேயே முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தங்கியிருக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அதனால், அந்த அலுவலகம் தங்கும் வசதியுடனேயே தயாராகி வருகிறதாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com