ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 53 சதவீத வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு பேட்டி

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 53 சதவீத வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சேலத்தில் மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு தெரிவித்தார்.
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 53 சதவீத வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு பேட்டி
Published on

சேலம், 

பெயர்மாற்றி செயல்படுத்துகிறது

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கடந்த 2 நாட்களாக மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை இணை மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு ஆய்வு செய்தார். இந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து வருகிறது. எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெயர் மாற்றி தமிழக அரசு அந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்த போதிலும் அரசு அலுவலகங்களில் பிரதமரின் படம் வைக்காதது துரதிருஷ்டவசமானது.

நிதி ஒதுக்கீடு

தமிழகத்தை பொறுத்தவரை, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கி வருகிறது. குறிப்பாக 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்துக்கு ரூ.1,677 கோடியே 81 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தூய்மை பாரத இயக்க திட்டத்துக்கு ரூ.4,532 கோடியும், பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.44 கோடியும், தேசிய ஹைட்ராலஜி திட்டத்துக்கு ரூ.21 கோடியே 60 லட்சமும் என மொத்தம் ரூ.6,281 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மாநில அரசு தனது பகிர்ந்தளிப்பு தொகையை சரியான நேரத்தில் ஒதுக்குவதில்லை. இதனால் அந்த திட்டம் மக்களிடையே சென்று சேருவதில்லை. மாறாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். ஏற்காடு மலை பகுதிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க அதிகாரிகள் பணம் கேட்பதாக புகார் வந்தது. இந்த திட்டத்தில் மக்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மின் கட்டண ஆவணம் இருந்தாலே போதுமானது.

இலக்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தமிழகத்தில் 53 சதவீத வீடுகளுக்கு மட்டுமே இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. 2022-க்குள் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்தும் இந்த இலக்கு முடிக்கப்படாததால் இந்த திட்டம் 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை, தமிழக அரசு முறையாக பயன்படுத்தப்படவில்லை.

மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி தாங்கள் செய்து வருவது போல காண்பித்து, மத்திய அரசு நிதியை இதர திட்ட பணிகளுக்கு செலவிடப்படுகிறது. மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா முழுவதும் 700 சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 8 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2 பள்ளிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தனி பல்கலைக்கழகம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு செய்து அனுமதி அளித்தால் மட்டுமே அணை கட்ட முடியும். தமிழகத்தில் பழங்குடியினருக்கு என தனி பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து மாநில அரசு பரிந்துரைக்கும் பட்சத்தில், மத்திய அரசு பரிசீலிக்கும்.

இவ்வாறு மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு கூறினார்.

இதையடுத்து மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் சேலம் பழைய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மத்திய மந்திரி ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கார்மேகம், பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத், மாநகர் மாவட்ட பார்வையாளர் முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com