இந்திய கோர்ட்டுகளில் 5.64 கோடி வழக்குகள் தேக்கம்: 9-வது இடத்தில் தமிழகம்

இந்தியாவில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதை பொறுத்தமட்டில், ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை சேர்த்து பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் 9-வது இடத்தில் இருக்கிறது.
வழக்குகள் தேக்கம்
Published on

சென்னை,

இந்திய கோர்ட்டுகளில் 5.64 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் 9-வது இடத்தில் இருக்கிறது.

நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது

'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது மிக ஆழமான சட்ட மற்றும் தார்மீக கோட்பாடாகும். நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர், நீதியின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது. குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் சரியான நேரத்தில் கிடைத்தால்தான் நீதி நிலைநாட்டப்படும். இதை வலியுறுத்தும் வகையில், இந்திய நீதித்துறை பல முக்கிய வழக்குகளில் உரிய காலத்தில் வழக்குகளை முடிக்கவும், தீர்ப்புகளை வழங்கவும் நீதிமன்றங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

5 கோடியே 64 லட்சம் வழக்குகள்

ஆனாலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அந்தவகையில், தற்போது இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 5 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 821 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் 95 ஆயிரத்து 825 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 26 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்கு மேலாக 558 வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்து 94 வழக்குகளும் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 436 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 3 ஆயிரத்து 513 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும், 76 ஆயிரத்து 298 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் நிலுவையில் இருந்து வருகின்றன.

அலகாபாத் ஐகோர்ட்டு முதலிடம்

மதுரை ஐகோர்ட்டு கிளையில் மட்டும் 1 லட்சத்து 89 ஆயிரத்து 959 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வரிசையில் அலகாபாத் ஐகோர்ட்டு 12 லட்சத்து 28 ஆயிரத்து 353 வழக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. சிக்கிம் ஐகோர்ட்டில் மிக குறைவாக 318 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.

கீழமை நீதிமன்றங்கள் எனப்படும் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா அளவிலான நீதிமன்றங்களை பொறுத்தமட்டில் தமிழகத்தில் மொத்தம் 17 லட்சத்து 89 ஆயிரத்து 467 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 450 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்கு மேலாக 4 ஆயிரத்து 173 வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கு மேலாக 63 ஆயிரத்து 962 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

9-வது இடத்தில் தமிழகம்

கீழமை நீதிமன்றங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 1 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 397 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதை பொறுத்தமட்டில் இந்தியாவில் உள்ள பிற ஐகோர்ட்டுகளை ஒப்பிடும்போது சென்னை ஐகோர்ட்டு 4-வது இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை சேர்த்து பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் 9-வது இடத்தில் இருக்கிறது. நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் குழு

5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து தீர்வு காண அனைத்து ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி, வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான காரணங்களை கண்ட றிந்து அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தவிர, மாற்றுமுறை தகராறு தீர்வு முறைகள் மற்றும் மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்), சமரச தீர்வு மையங்கள் மூலமாகவும் வழக்குகளை சுமூகமாக தீர்க்க அரசு ஊக்குவித்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com