தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வில் தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு
Published on

சென்னை,

பண்பாடு மக்கள் தொடர்பகம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கள ஆய்வு நிலவரத்தை நடத்தினர். இதுகுறித்து பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சமூக நிலவரத்தை தீர்மானிக்கும் காரணிகளையும் அவற்றின் கூட்டு செயல்பாட்டையும் கணிக்க கடந்த ஜூன் 9 முதல் ஜூன் 22 வரை தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து 5,874 பேரிடம் கள ஆய்வு நடத்தப்பட்டது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தின் முதல்வராக யார் வர வேண்டும் என்று கேட்டதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு 59 சதவீதம் பேரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 13 சதவீதம் பேரும், நடிகர் ரஜினிகாந்துக்கு 11 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தேசிய கட்சியில் இணைந்தால் தமிழக அரசியலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு அவருக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது என 55 சதவீதம் பேரும், வெற்றி பெறுவார் என 33 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது ஆட்சியை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தலாமா என்ற கேள்விக்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என 57.2 சதவீதம் பேரும், பொது தேர்தல் நடத்த வேண்டும் என 41.8 சதவீதம் பேரும், ஆட்சி தொடர வேண்டும் என 1 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு 54.5 சதவீதம் பேர் எதிர்ப்பும், 37.1 சதவீதம் பேர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். பூரண மதுவிலக்கு வேண்டும் என்று 39.7 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆண்கள் தரப்பில் 21 சதவீதம் பேர் மதுவிலக்கு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களின் பிடித்த முதல்வர் என்ற கேள்விக்கு காமராஜருக்கு 38.5 சதவீதம் பேரும், எம்.ஜி.ஆருக்கு 21.9 சதவீதம் பேரும், அண்ணாவுக்கு 15.1 சதவீதம் பேரும், கருணாநிதிக்கு 10.7 சதவீதம் பேரும், ஜெயலலிதாவிற்கு 7.4 சதவீதம் பேரும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 0.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com