பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 5-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

கோப்புப்படம்
தஞ்சாவூரில் 10 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டிபன்ராஜ். இவரது மனைவி ஏஞ்சலின் பாத்திமா. இவர்களது மகள் இனிய தர்ஷினி (10 வயது). இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று காலையில் இனிய தர்ஷினி பள்ளிக்கு செல்வதற்காக வழக்கம்போல் எழுந்து குளித்து கிளம்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு முன்புறம் இருந்த கொட்டகையில் இரும்பு கம்பத்தை தொட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், சிறுமி இனிய தர்ஷினி தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்கைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இனிய தர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






