கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேர்: தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் டிசம்பர் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேர்: தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்
Published on

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்க தொடங்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் 6 பேரின் பாதுகாப்பு கருதியும் அழைத்து வருவதில் நேரம் அதிகம் ஏற்படுவதால் கோவை சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் 6 பேரையும் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். 6 பேருக்கும் நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், நேற்று மீண்டும் 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிபதி முன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தினார்கள்.

விசாரணை செய்த நீதிபதி 6 பேருக்கும் டிசம்பர் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com