6 பெட்டிகளுடன் சென்னை மெட்ரோ ரெயில்: மத்திய நிதித்துறை ஒப்புதல்

பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

முதற்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மெட்ரோ ரெயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்ய கடந்தாண்டு மெட்ரோ ரெயில் நிறுவனம் கருத்துரு அனுப்பியது. கருத்துருவுக்கு தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஒப்புதல் அளித்த பின் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக 28 மெட்ரோ ரெயில்களை தயார் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2,820 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதை சாத்தியப்படுத்த சர்வதேச வங்கிகளிடம் இருந்து கடனுதவி பெற்று ரெயில்களை கொள்முதல் செய்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக விமான நிலையம் - விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்டிரல் ரெயில் நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பெட்டிகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் 54 கி.மீ தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com