ஒரே பைக்கில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள்; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தென்காசி அருகே ஒரே பைக்கில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஒரே பைக்கில் பயணித்த காட்சிகள் வைரலாகியுள்ளன.
சுரண்டை,
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் 6 பேர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு சுரண்டை புதுமார்கெட் பகுதியிலிருந்து கல்லூரி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அந்த காட்சியைப் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பஸ்சில் இருக்கைகள் இருந்தாலும், பஸ்சின் படியிலே தொங்கியபடியும், மோட்டார் சைக்கிளில் இவ்வாறு ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வது தொடர்கதையாக உள்ளது என கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நேரங்களில் இந்தப் பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






