கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வந்தனர்.

பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்து பின்னர் சிறிது நேரத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர்.

இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன் ராஜ் மற்றும் தாவீது ஆகிய 4 பேரை சடலமாக மீட்டனர். இந்நிலையில் இன்று காலை தெர்மஸ் என்பவரை சடலமாக மீட்கப்பட்டார். 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது ஈசாக் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட 6 பேரின் உடலும் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com