

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் முகக்கவசம் அணிந்த வாறு கடந்த மாதம் 29-ந்தேதி அதிகாலையில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சரின் உதவியாளரிடம், கோவிலில் விரைவில் சாமி தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரத்தை ஜி.பே. மூலம் அர்ச்சகர் லஞ்சம் வாங்கினார்.
முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் இருந்த ஊழியர்களும் பொதுமக்களிடம் பணம் கேட்டது தெரியவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, கோவில் அர்ச்சகர், பாதுகாப்பு பணியாளர்கள் 2 பேர், முடிக் காணிக்கை பணியாளர்கள் 2 பேர் என 5 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ராமு சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல் உதவி ஆணையர் மெய்வேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
அதற்கு பதிலாக சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் இணை ஆணையர் அருணாசலமும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உதவி ஆணையர் லோகநாதனும் திருச்செந்தூர் கோவிலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் வினய் பிறப்பித்து உள்ளார்.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் முறைகேடுகளை விசாரிக்கவும், ரூ.100 டிக்கெட், அன்னதானம், தங்குமிடம் முன்பதிவு போன்ற சேவைகளை ஆய்வு செய்து குழு அறிக்கை சமர்ப்பிக்கவும் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், கோ.ஜெயப்பிரியா, தங்கம், பாஸ்கரன், கார்த்திகேயன், பகவதி, மாயக்கண்ணன் உள்ளிட்ட ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவானது வருகிற 20-ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிடப்பட்டுள்ளார்.