கிருஷ்ணகிரியில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை: 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரியில் இரவு வீட்டிற்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 22 சவரன் தங்க நகை, ரூ.26 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவர் உளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஒபிரெட்டி மகன் பைய்யாரெட்டி (வயது 80) என்பவர் 23.06.2016 அன்று தனது மனைவி நாராயணம்மா என்பவருடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது இரவில் வீட்டிற்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் பைய்யாரெட்டி மற்றும் அவரது மனைவியை கத்தியைக் காட்டி மிரட்டி 22 சவரன் தங்க நகை மற்றும் பணம் ரூ.26 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக தளி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து இன்ஸ்பெக்டர் லட்சுமணன் புலன்விசாரணை மேற்கொண்டு வெங்கடேஷ் மகன் சுனில் (24), வெங்கடசாமி மகன் வசந்தகுமார்(எ) வசந்த் (28), கெம்பன்னா மகன் சந்தரேஷ்(எ) சந்திரா (25), ஆதிசேசா மகன் தீபக்(எ) தீபு (22), சின்னஎல்லப்பா மகன் விஜயகுமார்(எ) விஜி (23), முனியப்பன் மகன் முனிகிருஷ்ணன் (23), வெங்கடேசரெட்டி மகன் கோபால்(எ) கோபாலகிருஷ்ணன்(22), நஞ்சாரெட்டி மகன் சதிஷ்குமார் (21) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இவ்வழக்கின் விசாரணை தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (28.04.2025) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மேற்சொன்ன குற்றவாளிகளான சந்தரேஷ்(எ) சந்திரா முதல் சதிஷ்குமார் வரை உள்ள 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் நீதிமன்ற காவலர்களை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.






