தாயுடன் சேர முடியாமல் தவித்த 6 மாத குட்டி யானை முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு

தாயை காணாமல் குட்டி யானை மெலிந்து காணப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உளிபண்டா வனப்பகுதி உள்ளது. இங்கு கடந்த 4-ந் தேதி இங்குள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம் வந்தன. அப்போது 6 மாத குட்டி யானை குட்டையில் தவறி விழுந்தது. நீண்ட நேரமாக அந்த குட்டியை மீட்க போராடிய யானைகள், மீட்க முடியாமல் பின்னர் சென்று விட்டன.
இந்த நிலையில் ரோந்து சென்ற ஜவளகிரி வனத்துறையினர் அந்த குட்டி யானையை பொக்லைன் எந்திரம் உதவியுடன் மீட்டு தாய் யானையுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக 25 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
இதனால் சோர்வாக காணப்பட்ட குட்டி யானையை வனத்துறையினர் அஞ்செட்டி வனத்துறை காப்பகத்தில் வைத்து பால், உணவு ஆகியவற்றை கொடுத்து பராமரித்து வந்தனர். ஆனாலும் குட்டி யானை, தாயை காணாமல் மெலிந்து காணப்பட்டது. அந்த குட்டியை அதன் தாயுடன் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதை முதுமலை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து அந்த குட்டி யானையை வனத்துறையினர் முதுமலை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன்படி ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் உத்தரவின் பேரில் அஞ்செட்டி வனச்சரகர் கோவிந்தன், வனத்துறை டாக்டர் ஜெயச்சந்திரன், வனவர் ராஜமாணிக்கம் மற்றும் வனத்துறையினர் 6 மாத குட்டி யானையை வேன் மூலம் ஏற்றி முதுமலை தெப்பகாட்டில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.






