கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்: போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், போலி ஏஜெண்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்: போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

மீனம்பாக்கம்,

தமிழகத்தை சேர்ந்த வாலிபர்களை, கம்போடியா நாட்டில் தகவல் தொழில் நுட்ப வேலைகளுக்கு என்று கூறி அழைத்துச்சென்று அங்கு சட்டவிரோத வேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், மீறினால் தாக்கப்படுவதாகவும், கம்போடியாவில் சிக்கி தவிப்பவர்களை மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்திய தூதரகம் மூலமாக கம்போடியா நாட்டு அரசுடன் பேசி முதற்கட்டமாக 6 பேர் மீட்கப்பட்டனர். கம்போடியாவில் இருந்து தாய்லாந்து வழியாக சென்னை விமான நிலையம் வந்த 6 பேரையும் தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் 6 பேரும் சொந்த ஊர்களுக்கு வேனில் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை திரும்பி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பரணிதரன் கூறியதாவது:-

17 மணி நேரம் வேலை

கம்போடியாவில் கடன் சம்பந்தமான வேலை என சொல்லி அழைத்து சென்றனர். இண்டர்நெட் மூலம் பெண்கள் போல் பேசி பணத்தை பெற வேண்டும். அதில் இருந்து தான் சம்பளம் தருவார்கள். எனக்கு சம்பளமாக ஆயிரம் டாலர்கள் என கூறி அழைத்து சென்றனர். ஆனால் அங்கு 4 மாதங்களாக தினமும் 17 மணி நேரம் வேலை செய்தேன். சம்பளமாக 100 டாலர்கள்தான் தந்தார்கள். அது சாப்பாட்டு செலவுக்கே சரியாகிவிட்டது. மருத்துவ செலவை நானாகத்தான் செய்தேன். கம்போடியாவில் இதுபோல் நிறைய பேர் சிக்கி இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தினர் புகார் செய்த 20 நாளில் எங்களை அழைத்து வந்து உள்ளனர். எங்களை மீட்டு, அரசு செலவில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-

நடவடிக்கை

தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். கம்போடியா நாட்டுக்கு சென்ற 6 பேரும் தங்களுக்கு சொன்ன வேலை தரவில்லை எனவும், சட்டவிரோத வேலையை கொடுத்து அதை செய்ய மறுத்ததால் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களது குடும்பத்தினர் மூலமாக முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி அவர்கள் மீட்கப்பட்டு கம்போடியா நாட்டில் இருந்து அவர்கள் வீடு செல்லும் வரை விமான கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றது.

போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு சென்று ஏமாறாதீர்கள். வெளிநாட்டுக்கு செல்ல விரும்பினால் எந்த நாட்டுக்கு?, என்ன வேலை? என்பதை அயலக நலத்துறையில் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும். ஆசை வார்த்தைகளை நம்பி செல்ல வேண்டாம். குவைத் நாட்டில் சிக்கி தவித்த 36 பேர் மீட்டு வரப்பட்டு உள்ளனர். ஏஜெண்டுகள் மீது புகார் செய்து உள்ளனர். உள்துறை மூலமாக விசாரித்து பாலி ஏஜெண்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com