முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்ததில் 6 பேர் படுகாயம்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்ததில் 6 பேர் படுகாயம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ளது சித்தம்பாக்கம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகதீசன் (வயது 56). இவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் இறந்தார். இந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் அவர் வசித்து வந்த பெருமாள் கோவில் தெருவில் நடந்தது. அவரது உடலை கொண்டு சென்ற வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசுகள் இருந்த பையை மாட்டி வைத்திருந்தனர். அப்போது ஒரு ராக்கெட் வெடியை வெடித்தனர்.

அதில் இருந்து நெருப்பு சிதறி பட்டாசு மாட்டி வைத்திருந்த பையில் விழுந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் படபடவென வெடித்து சிதறின.

இதில் இறுதி ஊர்வல வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஜெகதீசனின் மகன் விவேக் என்பவரது நண்பர்களான முகேஷ் (18), சுரேஷ், அஸ்வின் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்கள் 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களில் முகேஷ் என்பவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 2 பேர் கண் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com