

தஞ்சை,
கும்பகோணத்தில் மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வழக் கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததில் வாலிபரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 7-ந் தேதி மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். ஆனால், அதற்குள் சங்கிலியை பறித்துக் கொண்டு 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதில் ஒருவர் கும்பகோணம் நீடாமங்கலம் சாலையை சேர்ந்த செல்வக்குமார் மகன் சிவா (வயது 36) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிவாவை பிடிப்பதற்காக போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை கண்ட சிவா, தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை விரட்டிச் சென்றபோது, தடுமாறி கீழே விழுந்தார். இதில் சிவாவுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் சிவாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவர் அம்பேத்கார் நகரை சேர்ந்த சேகர் மகன் அசோக் (34) என்பது தெரிய வந்தது.
நண்பர்களான இவர்கள் 2 பேரும் சேர்ந்து மூதாட்டியிடம் சங்கிலி பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அசோக்கையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 பவுன் சங்கிலியை வாங்கிய பீட்டர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பவுன் சங்கிலியையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சிவா, அசோக், பீட்டர் ஆகிய 3 பேரையும் போலீசார், கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிவா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.