

ராமேசுவரம்,
வருகிற 22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி வரையிலான பல்வேறு ஊர்களில் விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்து பூஜை செய்வதற்காக சுமார் 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ராமேசுவரத்திற்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டன.
அந்த சிலைகள் பத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள அபய ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உச்சிப்புளி வரையிலான பல ஊர்களில் 75 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்படும். மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்து பூஜை செய்வதற்காக விழுப்புரத்தில் இருந்து லாரி மூலம் 60 விநாயகர் சிலைகள் ராமேசுவரம் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் இந்த விநாயகர் சிலைகள் அந்தந்த ஊர்களுக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று அரசின் முறையான வழிகாட்டுதலுடன் சமூக இடைவெளியை பின்பற்றி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை, வழிபாடு நடத்த காவல்துறை மற்றும் அரசிடம் இந்து முன்னணி சார்பாக முறையாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.