தவெக சார்பில் போட்டியிட முதற்கட்டமாக 60 பேர் தேர்வு: யார் யார் தெரியுமா?

தவெக வருகிற சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தவெக சார்பில் போட்டியிட முதற்கட்டமாக 60 பேர் தேர்வு: யார் யார் தெரியுமா?
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு நடிகர் விஜய் தீவிரமாக தயாராகி வருகிறார். தவெக என்ற பெயரில் கட்சியை தொடங்கி மாநிலம் முழுவதும் நிர்வாகிகளையும் நியமித்துள்ள விஜய் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனை தவெக நிர்வாகிகள் மறுத்து உள்ளனர். இதுபோன்ற பரபரப்பான சூழலில் விஜய் இன்று சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கி உள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிவாரியாக விண்ணப்பித்தவர்களை நேரில் அழைத்து இன்று விஜய் அவர்களிடம் தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்? என்று கேட்டறிந்தார். முதல் கட்டமாக இன்று 60 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வைத்து இன்று விஜய் நேர்காணலை தொடங்கினார். திநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளரான என்.ஆனந்த் விருப்பமனு அளித்துள்ளார். அவரிடம் முதலில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கும் ஆதவ் அர்ஜுனா, உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ள சி.டி.நிர்மல்குமார், மயிலாப்பூர் தொகுதிக்கு வெங்கட்ராமன், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பும் முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த மாவட்ட செயலாளர் பாலமுருகன், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், வடசென்னை தொகுதி மாவட்ட செயலாளரான வக்கீல் சிவா,கோவை சம்பத், கரூர் மதியழகன், சேலம் பார்த்திபன், கினத்துக்கடவு விக்னேஷ், குன்னம் ரேவதி, சிந்துஜா,புதுக்கோட்டை பர்வேஸ், சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள டாக்டர் பிரபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் விஜய் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

இன்றைய நேர்காணலின் போது முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்து வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து மற்ற தொகுதிகளுக்கான நேர்காணலையும் விஜய் நடத்த உள்ளார். இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து வெளியிடவும் தவெக முடிவு செய்துள்ளது.

தவெக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் புது முகங்களே ஆவர்.தேர்தல் களத்திற்கும் இவர்கள் புதியவர்கள் தான். விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் ஈர்க்கப்பட்டு வருகிற சட்டசபை தேர்தலில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிகளவில் தவெகவிற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

அதிமுகவில் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் வாய்ப்பு கேட்டு விருப்பமனு அளித்திருக்கிறார்கள்.

அவர்களுடன் தவெக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருபவர்களில் பலர் விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்டகாலமாக பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நபர்களுக்கும் விஜய் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேர்காணலின்போது தவெக தேர்தல் வாக்குறுதிகள் கொள்கைகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவதற்கு நீங்கள் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக வருகிற சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com