60 சதவீதம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கவில்லை- அண்ணாமலை

60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
60 சதவீதம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கவில்லை- அண்ணாமலை
Published on

'என் மண்... என் மக்கள்' யாத்திரை

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' பாதயாத்திரையை கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூரில் நேற்று மாலை 4.45 மணிக்கு தொடங்கினார்.அவருக்கு கட்சியினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வழிநெடுகிலும் பூக்கள் தூவி வரவேற்றனர். யாத்திரையின்போது அண்ணாமலையுடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.மாலை 6.30 மணிக்கு யாத்திரை ஆனைமலை முக்கோணத்தை வந்தடைந்தது. அப்போது அண்ணாமலை, திறந்த வேனில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

தி.மு.க. சாதனை

ஆனைமலை குன்றுகளில் இருந்து உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கின்ற நதிகளை கிழக்கு நோக்கி திருப்பி திருப்பூர், கோவை மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த திட்டத்தை கொண்டு வந்தவர் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர். இந்த திட்டத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் காமராஜர் படமும், பெயரும் இல்லை.

காமராஜர் 9 ஆண்டு ஆட்சியில் 12 அணைகளை கட்டி, விவசாயத்தை செழிக்க செய்தார். ஆனால் தி.மு.க. அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து அனைவரையும் குடிக்க வைக்கின்றனர். இதுதான் தி.மு.க. அரசின் சாதனை.

60 சதவீதம் பேருக்கு வழங்கவில்லை

விவசாயிகளுக்கு தேவையான நீர்பாசனத்தை அதிகரிக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இதற்கு உதாரணமாக 65 ஆண்டு காலமாக ஆனைமலை ஆறு திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதேபோல பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மத்தியில் பா.ஜனதாவின் 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களாக மகளிர் உரிமைத்தொகையை எப்படி எல்லாம் ஏமாற்றி உள்ளார்கள் என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது 60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com