திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்: 4 பேர் மீது நடவடிக்கை

திருநெல்வேலியில் போலீசார் ரோந்துப் பணியின்போது ஒரு இளஞ்சிறார் உள்பட 4 பேரிடம் இருந்து போதை நோக்கத்தில் பயன்படுத்த வைத்திருந்த 600 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்.
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் போதை நோக்கில் தவறாகப் பயன்படுத்தப்படும் 600 மாத்திரைகள் பறிமுதல் செய்து ஒரு இளஞ்சிறார் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் ரோந்து பணி

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஒரு தனியார் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த ரிஷிகேஷ் (வயது 19), விஜய்ஆதித்தன்(22), அரக்கோணத்தைச் சேர்ந்த ஜனகிராமன்(21) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒரு இளஞ்சிறார் என நான்கு நபர்களை போலீசார் சோதனை செய்தனர்.

600 மாத்திரைகள் பறிமுதல்

அப்போது, மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் உரிய மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையிலும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய டேபென்டடால் (Tapentadol) மற்றும் நைட்ராசெபாம் (Nitrazepam) மாத்திரைகளை, அவற்றின் மருத்துவப் பயன்பாட்டிற்கு மாறாக, போதை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் தவறாகப் பயன்படுத்துவதற்காகச் சட்டவிரோதமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 60 ஸ்லிப்புகளில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 600 மாத்திரைகளை திருநெல்வேலி மாவட்ட போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரு இளஞ்சிறார் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை

இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் 3 பேரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு இளஞ்சிறாரை பாதுகாப்புக் காவலில் எடுத்து, இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின்படி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் போதை நோக்கில் தவறாகப் பயன்படுத்தப்படும் மருந்து மாத்திரைகளின் சட்டவிரோத புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com