

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் மொத்தம் 6.1 கிலோ கஞ்சா, கார் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் வழக்கமான வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு கார் மற்றும் ஒரு பைக்கில் வந்த சின்னமூலக்கரை பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 24), சூர்யா(23), பேச்சிமுத்து(34) மற்றும் நெல்லையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(19) ஆகிய 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 5 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, ஒரு கார் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்து, மேற்சொன்ன 4 பேரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதேபோன்று நேற்றைய தினம் திருநெல்வேலி தாலுகா போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேலகுளம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிவந்திபட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(33) மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து(24) ஆகிய 2 பேரையும் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் நேற்று ஒரே நாளில் திருநெல்வேலி மாவட்ட போலீசார் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளில் மொத்தம் 6.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.