

ரூ.62 லட்சம் நலத்திட்ட உதவி
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா, சென்ன சமுத்திரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 1,152 பயனாளிக்கு ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆதார் இணைப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 15-ந் தேதி (நாளை) தொடங்கப்படவுள்ளது. ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடக்க விழா நடக்கிறது. திமிரி, கலவை பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளும், ரத்த சோகை குறைபாடு உள்ள தாய்மார்களும் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் நல்ல ஆரோக்கியமான, ஊட்டசத்துகளை சாப்பிட வேண்டும்.
வங்கி கணக்கில் ஆதார் எண் இணைத்துள்ள 100 நாள் தொழிலாளர்களுக்கு மட்டும் அடுத்த மாதம் ஊதியம் வழங்கப்படும். முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வாங்காதவர்கள் உடனடியாக பதிவு செய்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் 105 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 36 மனுக்கள் ஏற்கப்பட்டது. 69 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சத்திய பிரதாப், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் ராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்யா, ராஜம்மாள், சமூக பாதுகாப்பு தாசில்தார் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், ஜெகநாதன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் இந்துமதி நன்றி கூறினார்.