

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 6,226 பேர் எழுதினர்.
'நீட்' தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.இதில் நெல்லையில் 11 தேர்வு மையங்களும், தென்காசியில் 1 தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 6,780 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களில் 6,226 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 554 பேர் தேர்வு எழுதவில்லை. மாணவர்கள் நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்த யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பின்னர் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது.
உடல் வெப்ப பரிசோதனை
தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு மையத்துக்குள் முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கிருமி நாசினிகள் மூலம் கைகளை கழுவிய பிறகு உள்ளே சென்றனர். ஏற்கனவே மாணவ-மாணவிகள் கம்மல், சங்கிலி, மூக்குத்தி, பெல்ட், கைக்கெடிகாரம் உள்ளிட்டவை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலானோர் அவற்றை முன்கூட்டியே கழற்றிவிட்டு வந்தனர். ஒரு சிலர் தேர்வு மையத்துக்கு வந்து கழற்றி உறவினர்களிடம் கொடுத்தனர்.
மேலும் மாணவிகள் தலையில் கிளிப் உள்ளிட்டவை அணியவும் தடை விதிக்கப்பட்டது. தேர்வு அறைக்குள் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தேர்வு அறைக்குள் செல்போன்கள், கால்குலேட்டர்கள், புளூடூத், இயர்போன், மைக்ரோ போன், பேண்ட் போன்ற எந்த தகவல் தொடர்பு சாதனங்களும் கொண்டு செல்கிறார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது.மாணவர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. மேலும் உரிய அடையாள அட்டையும் சரிபார்க்கப்பட்டது.