

சென்னை,
சென்னையிலேயே 63 சதவீத மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது என்றால், மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறதோ? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, கொரோனா மரணங்களில் விடுபட்ட கணக்குகளைத் தணிக்கை செய்வதற்காக அரசின் சார்பில் 38 மாவட்ட கமிட்டிகளும், 1 மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு 7 வாரங்கள் கடந்த நிலையில், ஜூலை 11-ந்தேதி நிலவரப்படி அத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டது பற்றியோ, அதன் அறிக்கைகள் பற்றியோ பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
ஜூன் 11-ந்தேதி, அரசாங்கத்தின் இரு துறைகளின் (மக்கள் நல்வாழ்வுத்துறை, சென்னை மாநகராட்சி) மரணக் கணக்கில் உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 6 வார கால மறு ஆய்வுக்குப் பிறகு, 444 கொரோனா மரணங்கள் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
மறைக்கப்பட்ட இந்த கொரோனா மரணங்கள் வெளிப்பட்டதன் காரணமாக, ஜூலை 10-ந்தேதி வரை சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் விகிதம் என்பது அரசு இத்தனை நாள் தெரிவித்து வந்த 1 சதவீதம் என்பதற்குப் பதிலாக 2.67 சதவீதம் என்கிற உண்மை வெளிப்பட்டது.
சென்னையில் உறுதியான கட்டமைப்பு இருந்தும்கூட, 63 சதவீத மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது என்றால், இந்த அளவுக்கு நிர்வாகக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கும்? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
ஜூலை 10-ந்தேதி வெளியான ஒரு தகவலின் அடிப்படையில், மதுரையில் கோவிட் நோய்த்தொற்று மரண எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக அங்குள்ள மயானங்கள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன என்கிற செய்தி தெரியவந்துள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 10 நாட்களில், மதுரையில் உள்ள மின் மயானங்களில் வழக்கத்தைவிட மும்மடங்கு உடல்கள் கொண்டு வந்து எரியூட்டப்பட்டுள்ளன என்றும், அந்த நாட்களில் இறந்தவர்கள் மட்டும் 97 பேர் என்றும் தெரியவந்துள்ளது.
மதுரையில் ஏற்பட்ட கொரோனா மரணங்கள் குறித்த தொடர் விசாரணையில், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கைக்கும், மயானப் பதிவேடுகளில் உள்ள எண்ணிக்கைக்கும் முரண்பாடுகள் தெரிகின்றன. ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின் அடிப்படையில் பார்த்தால், மதுரையில் ஏற்பட்ட உண்மையான மரணங்களின் எண்ணிக்கையைக் கண்டறிய மற்றொரு விசாரணை தேவைப்படுகிறது.
மறைக்கப்பட்ட மரண எண்ணிக்கை தொடர்பான விசாரணைக் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் இதுநாள் வரையில், 63 சதவீத மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது எனக்கொண்டால், தமிழ்நாட்டில் கொரோனா மரண விகிதம் என்பது 3.66 சதவீதம் ஆகும். சென்னையில் மட்டும் அது 4.47 சதவீதம் என்ற அளவில் இருப்பதையும் அறிய முடியும்.
ஜூலை 22-ந்தேதி, மரண எண்ணிக்கையில் இனியும் தவறுகள் நேராமல் இருப்பதற்காக மாநில அளவிலான கமிட்டி அமைப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மரணக் கணக்கில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக ஏற்கனவே 39 கமிட்டிகளை அமைப்பதாகச் சொல்லியிருந்த, எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் புதிதாக ஒரு கமிட்டியை அமைக்கவேண்டும்?
ஜூலை 24-ந்தேதி மாவட்ட கலெக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், இனி தவறான கணக்கீடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட குறைந்த அளவிலான மரண எண்ணிக்கை கொண்ட அறிக்கைக்கு முரணாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எண்ணிக்கை வெளிப்படக்கூடாது என்பதற்கான மறைமுக எச்சரிக்கைதான் இந்த கடிதமா? என்கிற கேள்வியும் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் கடையம் வட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து (வயது 56) என்பவர் தனது வயலைப் பன்றிகள் சேதப்படுத்துவதால், அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்தது தொடர்பாக ஜூலை 22-ந்தேதி இரவு 11 மணியளவில் கடையம் சரக வன அதிகாரி நெல்லை நாயகமும், அவருடன் வனத்துறையினரும் வந்து சட்டை கூட அணிவதற்கு அவகாசம் தராமல் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அதன்பின் நள்ளிரவில் முத்துவின் மூத்த மகன் நடராஜனும், மைத்துனரும் ஒரு சட்டையை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்குச் செல்லும்போது, எதிரே வனத்துறையினரின் வாகனம் வந்துள்ளது. அதில், தனது அப்பா பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதைப் பார்த்து நடராஜன் பதறி, விசாரித்துள்ளார். ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, முத்துவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முத்துவை விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அழைத்துச் சென்ற வனத்துறையினரே, அவரது உயிர் பறிக்கப்பட்டதற்குக் காரணம் என ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக, நேரம் கடந்தும் சட்டைகூட அணிய அவகாசம் தராமலும் மனித உரிமைகளை மீறி அழைத்துச் செல்லப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட அணைக்கரை முத்துவின் குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் எனத் தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன். நீதிக்கான சட்டப் போரட்டத்தில் தி.மு.க. துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.