தமிழ்நாட்டில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

பதவியேற்ற முதல் நாளிலேயே, போதைப்பொருள் தடுப்பு தொடர்பான உத்தரவில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்று இருக்கிறார். இதன் மூலம் கடந்த 5 நாட்களாக நொடிக்கு நொடி நடந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய விஜய், அடுத்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து அசத்தியிருக்கிறார்.

அவரது பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதல்-அமைச்சராக பதவியேற்ற விஜய், 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முதலாவதாக, 500 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர்களுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டுள்ளார்.

இதையடுத்து 3-வது அறிவிப்பாக, தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை தடுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 37 காவல் நிலையங்களிலும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று என்ற வீதத்தில் 28 காவல் நிலையங்களிலும் என மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த வாக்குறுதி கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், பதவியேற்ற முதல் நாளிலேயே, தமிழ்நாட்டில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைப்பது தொடர்பான உத்தரவில் முதல்-அமைச்சர் விஜய் இன்று கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com