65 லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 65 லட்சத்து 70 ஆயிரத்து 295 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
65 லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

அமைச்சர் ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, வீடு தேடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நொச்சிக்குப்பம், அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட்நகர் ஊரூர் குப்பம், பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட கொட்டிவாக்கம் குப்பம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட நீலாங்கரை குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

65 லட்சம் பேர்

தமிழ்நாட்டில் இதுவரை கோவேக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்தாதவர்கள் 14 லட்சத்து 7 ஆயிரத்து 903 பேரும், கோவிஷீல்டு 2-வது தவணை 51 லட்சத்து 60 ஆயிரத்து 392 பேரும் என மொத்தம் 65 லட்சத்து 70 ஆயிரத்து 295 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளார்கள். சென்னை மாநகராட்சியின் சார்பில் கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் யாருக்கெல்லாம் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டும் என பட்டியலை தயார் செய்திருக்கிறார்.

அந்தவகையில் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள 536 வீடுகளில் 2 ஆயிரத்து 956 பேர் வசிக்கின்றனர். இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 771 பேர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 557 பேர். தடுப்பூசி செலுத்தாத மீதமுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்த திட்டம் இங்கு தொடங்கப்பட்டு உள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்

தினந்தோறும் வார நாட்களில் வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். நவம்பர் 14-ந்தேதி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், த.வேலு, ஜே.எம்.எச்.அசன் மவுலானா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் எஸ்.மனிஷ் (சுகாதாரம்), விஷூ மகாஜன் (வருவாய் மற்றும் நிதி), சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் (தெற்கு வட்டாரம்), பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com