ஓடும் பேருந்தில் மயக்க சாக்லேட் கொடுத்து மூதாட்டியிடம் 6.5 பவுன் நகை பறிப்பு

கோவையில் ஓடும் பேருந்தில் மயக்க சாக்லேட் கொடுத்து மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி (70 வயது). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் கோவையில் உள்ள தனது மகனை பார்க்க ஈரோட்டில் இருந்து அரசு பேருந்தில் புறப்பட்டார். பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது அருகில் மற்றொரு பெண் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே பயணித்தனர். அப்போது அந்த பெண் தனது பையில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து லட்சுமியிடம் கொடுத்தார். மேலும் அந்த பெண்ணும் மற்றொரு சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டார்.

இதனால் அந்த பெண் கொடுத்த சாக்லேட்டை லட்சுமி நம்பி சாப்பிட்டார். பாதி சாக்லேட்டை கடித்து சாப்பிட்டபோது, லட்சுமிக்கு ஒரு மாதிரியாக இருந்துள்ளது. இதனால் மீதி சாக்லெட்டை ஜன்னல் வழியாக வெளியே வீசி விட்டார். பின்னர் தான் வைத்திருந்த தண்ணீரை குடிக்க முயன்றார். அப்போது அந்த பெண் தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்தார். இதனை வாங்கி லட்சுமி குடித்த சிறிது நேரத்தில் மயங்கினார்.

அவரை தாங்கிக்கொண்ட அந்த பெண் அவரது கழுத்தில் இருந்த 6.5 பவுன் தங்க நகையை பறித்தார். சிறிது நேரம் கழித்து ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் அந்த பெண் கீழே இறங்கி சென்று விட்டார். இருக்கையில் லட்சுமி மட்டும் மயங்கி கிடந்தார்.

இதை கவனித்த நடத்துநர், லட்சுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்த லட்சுமி, கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை திருடுபோயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com