முதலீடு செய்த 6500 பேர் புகார்; ஆம்னி பஸ் நிறுவனம் நடத்தி ரூ.1,000 கோடி மோசடி

ரூ.1000 கோடி மோசடி செய்த ஆம்னி பஸ் நிறுவனம் மீது 6500 பேர் புகார் அளித்து உள்ளனர் என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முதலீடு செய்த 6500 பேர் புகார்; ஆம்னி பஸ் நிறுவனம் நடத்தி ரூ.1,000 கோடி மோசடி
Published on

மதுரை,

தஞ்சையில் ஆம்னி பஸ்கள் கொண்ட டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை கமாலுதீன் என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை முறையாக பதிவு செய்யவில்லை என்றும், இந்த நிறுவனத்தின் பெயரில் ஏராளமானவர்களிடம் முதலீடுகளை பெற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் கொரோனாவால் திடீரென இறந்துவிட்டார்.

அதன்பின் அந்த டிரான்ஸ்போர்ட் நிறுவனம் முறையாக செயல்படவில்லை. இதனால் பங்குதாரர்களுக்கு பங்குத்தொகையை வழங்க இயலவில்லை. இதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு கமாலுதீனின் மனைவி ரெஹானா பேகம், கமாலுதீனின் சகோதரர் அப்துல் கனி, நிறுவனத்தின் மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

ரூ.1,000 கோடி மோசடி

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அரசு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, கோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கை திருச்சி மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்து உள்ளது. ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை முடக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. 57 ஆம்னி பஸ்களும், கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள் ளன. வங்கி கடனுக்காகவும் சில பஸ்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டதாக இதுவரை 6,500-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது.

இவ்வாறு அரசு வக்கீல் வாதாடினார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை பெற்று, இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து உள்ளனர். 2020-ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கான பங்குத்தொகை முறையாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

மனுதாரர்களும் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று உள்ளனர். எனவே மனுதாரர்களிடம் விசாரணை நடத்துவது அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க இந்த கோர்ட்டு விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com