

குமரி,
குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரி அன்பு தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக ஜனவரி மாதம் முதல் கடல் ஆமைகள் மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு செல்வது வழக்கம். அவற்றை வனத்துறையினர் கண்கா ணித்து பாதுகாப்பாக சேகரித்து பொரிப்பகத்தில் வைப்பார்கள். குஞ்சுகள் பொரிந்ததும் அவை கடலில் விடப்படுவது வழக்கம்.
தற்போது கோடை சமயம் என்பதால் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;
குமரி மாவட்டத்தில் 46 மீனவ கிராமங்கள் உள்ளன. அங்குள்ள கடற்கரை பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் (பங்குனி ஆமை) கரைக்கு வந்து மணலில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். ஒரு ஆமை 140 முதல் 170 வரை முட் டைகள் இடும். தற்போது கடல் ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங் கியுள்ளது. இந்த ஆண்டில் முதல் முறையாக லெமூர் கடற்கரை பகுதி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல் உள்பட கடற்கரைகளில் கடல் ஆமைகள் முட்டைகளை இட்டது.
கடற்கரையில் நான்கு இடங்களில் ஆமை முட்டைகள் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் லெமூர் கடற்கரை மற்றும் துவாரகாபதி ஆகிய பகுதிகளில் 3 கடல் ஆமை முட்டை பொரிப்பகம் இருக்கிறது.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 2 மாதங்களில் 6,504 கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டது. இதில் 1,448 குஞ்சுகள் முட்டைகளில் இருந்து வெளிவந்தது. அந்த ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டுள்ளன. மேலும் கடற்கரை பகுதிகளில் வனஊழியர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.