

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்க மாவட்டத்தில் மொத்தம் 876 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட தேர்வுக்கு 451 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 65 பேர் உடற்தகுதி தேர்வுக்கு வரவில்லை. இதையடுத்து 386 பேருக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டதில், 330 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
652 பேர் தகுதி
இதேபோல் நேற்று நடந்த உடற்தகுதி தேர்வுக்கு 425 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 54 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதையடுத்து உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்த 371 பேருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 322 பேர் இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மொத்தம் 652 பேர் இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்ட 330 பேருக்கு இன்றும் (புதன்கிழமை), நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட 322 பேருக்கு நாளையும் (வியாழக்கிழமை) இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது.