திருநெல்வேலியில் காவலர்கள் உடல் திறனாய்வு தேர்வில் 658 பேர் பங்கேற்பு

இரண்டாம் நிலை காவலர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு, உடல் திறனாய்வு தேர்வுகள் நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வுகள், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் 22.1.2026 முதல் நடைபெற்று வருகின்றன.
அதன்படி 22.1.2026 மற்றும் 23.1.2026 ஆகிய 2 நாட்களில் 985 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில், 829 விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். இந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட 829 விண்ணப்பதாரர்களில், 666 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் திறனாய்வு தேர்வில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றனர்.
உடல் திறனாய்வு தேர்வில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்ற 666 விண்ணப்பதாரர்களில், நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல்(அ) உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 400 மீட்டர் (அ) 100 மீட்டம் ஓட்டம் ஆகிய உடல் திறனாய்வு தேர்வில் 658 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வுகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையிலும், திருநெல்வேலி மாவட்ட தேர்வு மையத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் நேரடி கண்காணிப்பிலும் நடைபெற்றன. மேலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






