திருச்சியில் இருந்து 67 மாணவ-மாணவிகள் துபாய்க்கு கல்வி சுற்றுலா

திருச்சியில் இருந்து கல்வி சுற்றுலாவாக 67 மாணவ-மாணவிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்.
திருச்சியில் இருந்து 67 மாணவ-மாணவிகள் துபாய்க்கு கல்வி சுற்றுலா
Published on

திருச்சி,

தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு வாரந்தோறும் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளி கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

67 மாணவ-மாணவிகள்

இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது பிளஸ்-1 படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் தற்போது அவர்களை துபாய்க்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 67 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்களை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று, அவர்களுக்கு வாழ்த்து கூறினார்.

விமானத்தில் புறப்பட்டு சென்றனர்

இதைத்தொடர்ந்து அங்கிருந்து மாணவ, மாணவிகள் நேற்று காலை 8 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தனர். காலை 9.30 மணியளவில் விமான நிலையத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார்.

பின்னர் அவர் தலைமையில் மாணவ, மாணவிகள் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம், தாமதமாக காலை 10.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது.

4 நாட்கள் கல்வி சுற்றுலாவாக துபாய்க்கு சென்றுள்ள மாணவ, மாணவிகள், சார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com