தென்மாவட்டங்களில் ஒரு மாதத்தில் கஞ்சா வழக்கில் 687 பேர் கைது: ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி தகவல்

"ஆபரேஷன் ஷீல்டு நெட்" என்ற அதிரடி நடவடிக்கை மூலம் தென்மண்டல அளவில் கடந்த ஒரு மாதத்தில் 2,441 பிணையில்விட முடியாத கைது வாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி தெரிவித்துள்ளார்.
தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி
Published on

மதுரை,

'ஆபரேஷன் ஷீல்டு நெட் நடவடிக்கையாக, தென்மாவட்டங்களில் கஞ்சா வழக்கில் 687 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் ஷீல்டு நெட்:

தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, தென் மண்டலத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக "ஆபரேஷன் ஷீல்டு நெட்" என்ற அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி மே மாதம் 20-ம் தேதி முதல் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென்மண்டலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் ஆபரேஷன் ஷீல்டு நெட் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த சோதனையில் கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை தடுத்தல், ரவுடிகள் கண்காணிப்பு, சந்தேக நபர்களிடம் சோதனை, நிலுவையிலுள்ள வாரண்ட், கைது வாரண்ட் நிறைவேற்றம், தீவிர வாகனச் சோதனை, ஜாமீன் ரத்து மனுக்கள் தாக்கல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தென்மண்டல ஐ.ஜி. அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

497 கஞ்சா வழக்குகளில் 687 பேர் கைது:

தென்மாவட்ட அளவில் 401 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, இது தொடர்பாக 497 வழக்குகளில் 687 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,458 கிலோ புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்து, 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்படி மதுரையில் 57, விருதுநகர் 58, திண்டுக்கல் 68, தேனி 44, ராமநாதபுரம் 63, சிவகங்கை 32, நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் 85, தூத்துக்குடி 56, தென்காசி 69, கன்னியாகுமரி 103 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

2,441 பிணையில்விட முடியாத கைது வாரண்டு நிறைவேற்றம்:

தென்மண்டல அளவில் இதுவரை 2,441 பிணையில்விட முடியாத கைது வாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை 326, விருதுநகர் 230, திண்டுக்கல் 288, தேனி 62, ராமநாதபுரம் 251, சிவகங்கை 246, நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் 321, தூத்துக்குடி 191, தென்காசி 275, கன்னியாகுமரி 251 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாமீனில் வெளிவந்த பிறகும் ஒழுங்காக நடந்து கொள்ளாமல் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு மதுரை 34, விருதுநகரில் 60, திண்டுக்கல் 31, தேனி 46, ராமநாதபுரம் 77, சிவகங்கை 153, நெல்லை நகர், மாவட்டத்தில் 88, தூத்துக்குடி 79, தென்காசி 45, கன்னியாகுமரி 81 என 694 பேரின் ஜாமீன் ரத்து மனுக்கள் கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

55 ஆயிரத்து 336 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்:

பதிவு எண் இன்றி, அதிவேக, ஆபத்து, ஓட்டுநர் உரிமம் இன்றி, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல், மின்மினி விளக்குகள், சட்டவிரோத மாற்றங்கள் செய்த வாகனங்கள் பயன்படுத்துதல் போன்ற விதிமீறல் தொடர்பாக 55 ஆயிரத்து 336 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com