ஆயுத பூஜை தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகளில் 6.91 லட்சம் பேர் பயணம் - போக்குவரத்துத் துறை தகவல்

போக்குவரத்துத் துறை சார்பில் 30-ந்தேதி வரை 13,303 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்ய வசதியாக, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், சிறப்பு பேருந்துகளில் இதுவரை 6.91 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜையை (தொடர் விடுமுறையை) முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில், (30.09.2025) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி 13,303 பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் 6,91,757 பயணிகள் பயணித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






