வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 69.25 சதவீதம் நிறைவு

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் 69.25 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 69.25 சதவீதம் நிறைவு
Published on

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் 69.25 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு கைத்தறித் தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனருமான ஷோபனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷேபனா பேசியதாவது:-

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 8.12.2022 வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகளுக்கு வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், பெயர் நீக்கல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

69.25 சதவீதம் நிறைவு

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோ, 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க வசதியாக 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 8.12.2022 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5.01.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த 1.8.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்பொழுது சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் 69.25 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

விழிப்புணர்வு பணிகள்

பிற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக இளம் வாக்காளர்களை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு தேவையான விழிப்புணர்வு பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com