

சென்னை,
ரஜினிகாந்த் தனது 69-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் ரஜினியின் ரசிகர்கள் கோலாகலமாக அவரது பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் சமூக வலைதளங்களில் ரஜினிக்கு திரையுலகினரும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகளை பதிவிட்டனர்.
ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன்! என்று கூறியிருந்தார்.
நடிகர் கமல் தனது டுவிட்டர் பதிவில், என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகளை தமிழில் தெரிவித்திருந்தார். மலையாள நடிகர் மோகன் லால் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை எடுத்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
மேலும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், டைரக்டர் ஷங்கர் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வாழ்த்திய அனைத்து திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.