ஓசூரில் பரபரப்புரூ.3½ கோடி வீட்டுவசதி வாரிய நிலத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேடுஉதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைது

ஓசூரில் பரபரப்புரூ.3½ கோடி வீட்டுவசதி வாரிய நிலத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேடுஉதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைது
Published on

ஓசூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

போலி பத்திரம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகர் பகுதியில் இடம் உள்ளது. இதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி 16-ல் நிலத்துக்கான விற்பனை நடைபெற்றது. குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற நிலத்தை சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாக வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் சென்றது.

இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ரவி தங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

7 பேர் கைது

போலீசார் விசாரணையில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக திருப்பூர் மாவட்டம் மானூரை சேர்ந்த மதி என்கிற மதியழகன் (வயது 50), சென்னை அய்யம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் (55), சென்னை மாதவரத்தை சேர்ந்த ஆராவமுது (58), திருவள்ளூர் மாவட்டம் அய்யம்பாக்கம் திருவேற்காட்டை சேர்ந்த முருகதாஸ் (55), கன்னியாகுமரி மாவட்டம் கட்டாந்துறையை சேர்ந்த ஆனந்த் (50), ஓசூர் பாரதி தாசன் நகரை சேர்ந்த சதீஷ் (37), சென்னை சத்திரத்தை சேர்ந்த டேனியல் (48) ஆகிய 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

இதில் ஆராவமுது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உதவி வருவாய் அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோல் மதி என்கிற மதியழகன், ஈரோட்டில் ஈமு கோழி விற்பனையில் தண்டனை பெற்றவர் ஆவார்.கைதான 7 பேரிடம் இருந்தும் 13 செல்போன்கள், 62 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி, தர்மபுரி சிறைகளில் அடைத்தனர். ஓசூரில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com